ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

, , 2 Comments

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

அவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

“இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். ”

தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார். அவர்களின் அருகே வந்த ஃபுளைல் ” நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன்” என்றார்.

வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்

இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.

“ஆம்! நாம் மாறினால் என்ன? நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே! இனி நான் திருட மாட்டேன் ” என உறுதி கொண்டார்.

காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்கள் யார் எனக் கேட்டனர்?

நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.

என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க  முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.

இன்னொரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.

திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? ”

எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்

“இதோ வந்துவிட்டேன் என் இறைவா?

இதோ உருகிவிட்டேன் என் இறைவா?

இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா?

என் பாவங்களை மன்னித்துவிடு! என் – குற்றங்களை பொறுத்து விடு! ” என்றார்.

ஃபுளைல் மாறினார்!  நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார்,

Facebook Comments

 

2 Responses

Leave a Reply