அடிமைப் பெண்ணின் சாதுரியம்

, , Leave a comment

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்

 

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப் பெண்ணொருத்தி விருந்தினருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது அவளது கால்கள் தடுமாறிவிட்டதால் அவள் பரிமாறிக் கொண்டிருந்த குழம்பு, இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் மீது சிந்திவிட்டது.

இமாம் ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. அடிமைப் பெண்ணை எரித்து விடுவது போல் கண்களில் கனல் கக்க முறைத்துப் பார்த்தார்கள்; பாவம், அந்த அடிமைப் பெண் பதறிப் போனாள். பயத்தால் அவள் உடல் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம் அடிமைப் பெண் வாயிலிருந்து அவளையுமறியாது, கீழ்க்காணும் தித்திக்கும் திருகுர்ஆன் வசனம் வெளிப்பட்டது.

‘(அவர்கள்) கோபத்தை விழுங்கி விடுவார்கள்’ (அத் – 3வச. 134)

இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் இதனைக் கேட்டதும், அடிமைப் பெண்ணைப் பார்த்து, ‘நான் எனது கோபத்தை அடக்கிக் கொண்டேன்’ என்று கூறினார்கள். (அதன்பின்) உடனே அந்த அடிமைப் பெண் வாயிலிருந்து பின்வரும் கருத்துப்படும் திருமறை வசனம் வெளிப்பட்டது.

‘(அவர்கள் மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள்’

(அத் – 3 வசனம் – 134)

இமாம் ஹஸன்(ரலி) அவர்கள் இதனைக்கேட்டு ‘நான், நீ செய்த குற்றத்தை மன்னித்து விட்டேன்’ என்றார்கள் அதன்பின், அந்த அடிமைப் பெண், திருகுர்ஆனின் இந்த வசனத்தின் கடைசிப் பகுதியைப் பின்வருமாறு ஓதினாள்:

‘அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கிறான்’

இதைக் கேட்டதும் இமாம் ஹஸன் (ரலி) அவர்களின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்து விட்டது; அடிமைப் பெண்ணின் சாதுரியத் தன்மையையும், திருக்குர்ஆனைப் பற்றி அப்பெண் கொண்டுள்ள ஞானத்தைப் பற்றியும் பாராட்டி, அவளை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்து விட்டார்கள்.

Facebook Comments

 

Leave a Reply