சுவர்க்கவாதியா நரகவாதியா?

, , Leave a comment

சுவர்க்கவாதியா நரகவாதியா?

ஒருமுறை இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களிடம் காரிஜியாக்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். ஒன்று திரண்டு வந்த காரிஜியாக்கள் ‘இரண்டு ஜனாஸாக்கள் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குடிகாரனுடையது. அவன் குடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டான். மற்றையது நடத்தை கெட்ட பெண்மணி ஒருவருடையது. அவள் வெட்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டாள். இவர்களது நிலை என்ன?’ என்று வினவினார்கள்.

அப்போது இமாம் அவர்கள் ‘இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்கள் யூதர்களா? அல்லது கிறிஸ்தவர்களா? அல்லது நெருப்பை வணங்கும் மஜூஸிகளா?’ என வினவினார்கள்.

அதற்கு காரிஜியாக்கள் ‘அவர்கள் கலிமாவை மொழிந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களேயன்றி வேறு மதங்களை சேர்ந்தவர்கள் அல்லர்’ என்றனர்.

அப்படியென்றால், ‘இது ஈமானில் மூன்றிலொரு பங்கா? அல்லது நான்கிலொரு பங்கா? அல்லது ஐந்திலொரு பங்கா?’ என இமாம் அபூஹனிபா வினவினார்.

அதற்கு அவர்கள், ஈமானை அவ்வாறு கூறு போட முடியாதே….!’ என்றனர்.

‘அப்படியாயின் ஷஹாதத் கலிமாவை ஈமானின் எத்தனை சதவிகிதமாக நீங்கள் கருதுகிaர்கள்?’ என இமாம் அவர்கள் வினவினார்.

அப்போது காரிஜியாக்கள்’ அதை நாங்கள் முழுமையான ஈமானாகவே கருதுகின்றோம்’ என்றனர்.

அச்சமயம் இமாம் அவர்கள், ‘அவ்வாறாயின் நீங்களே அவர்களை முஃமீன்கள் என ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் என்னிடம் வந்துகேட்க வேண்டியதன் அவசியம் என்ன?’ என்று வினவினார்கள்.

அப்போது அவர்கள் ‘இவர்கள் சுவர்க்கவாதியா? அல்லது நரகவாதியா? என்பதை அறிந்து கொள்ளவே நாம் இங்கு வந்தோம்’ என்றார்கள்.

அப்போது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள், ‘சரி நீங்கள் கேட்பது அது தான் என்றால் அல்லாஹ்வின் தூதர் இப்றாஹீம் (அலை) அவர்கள் இவர்களை விட மோசமான குற்றவாளிகளைப் பற்றி கூறியதையே உங்களுக்கும் நான் பதிலாகக் கூறுகின்றேன்.’

‘என் இறைவனே நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்துவிட்டன. ஆகவே எவன் சிலைகளை வணங்காது என்னைப் பின்பற்றுகின்றானோ அவன் தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன். எவன் எனக்கு மாறு செய்கின்றானோ (அவன் என் சந்ததியில்லை. எனினும் என் இறைவனே!) நிச்சயமாக! நீ மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனுமாக இருக்கின்றாய்!’

(அல்குர்ஆன் – 14 : 36)

‘இதேபோல் அல்லாஹ்வுடைய மற்றொரு தூதுவரான ஈஸா (அலை) அவர்கள் இந்த இருவரையும் விடக் கேடுகெட்ட மிகப் பெரும் குற்றவாளிகளைப் பற்றிக் கூறும்போது ‘அவர்களை நீ வேதனை செய்ய நினைத்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! (உன்னுடைய அடியார்களை உன் இஷ்டப்படி செய்ய உனக்கு உரிமை உண்டு) அன்றி அவர்களை நீ மன்னித்து விட்டாலோ (அதனை தடைசெய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றாய்.’

(அல்குர்ஆன் – 5 : 118)

‘மேலும் அல்லாஹ்வுடைய மற்றொரு இறை தூதர் நூஹ் (அலை) அவர்கள்.’ (இவைகளைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல). இதனைக் கூட அறிந்து கொள்ள வேண்டாமா? நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.’

(அல்குர்ஆன் – 26 : 113, 114)

இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் இந்தப் பதிலைச் செவியேற்ற காரிஜியாக்கள் தமது கருத்து தவறானது, பிழையானது என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

Facebook Comments

 

Leave a Reply