புத்திசாலி பீர்பால்

, , 1 Comment

புத்திசாலி பீர்பால்

 

இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார்.

“இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர், எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை ஆட்டினர். யாராலும் பேரரசரின் இந்த வினாவிற்கு சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. ‘இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’

எல்லோரையும் விட புத்திசாலியான பீர்பால், அப்பொழுது தர்பாரின் உள்ளே நுழைந்தார். அரசவை ஊழியர்கள் தலை குனிந்து நிற்பதைக் கண்டார். பேரரசர் இட்ட புதிரை அவிழ்க்க முடியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அரசவைக்குரிய மரியாதையுடன் பீர்பால், பேரரசரை தலை குனிந்து வணங்கி விட்டு தன் இடத்தில் அமர்ந்தார். பேரரசர், அவரிடம் ‘பீர்பால், இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’ என்று கேட்டார்.

சமயோசித புத்தியுள்ள பீர்பால் உடனே எழுந்து நின்று ‘பேரரசே இந்நகரத்தில் ஐம்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தெட்டு காக்கைகள் இருக்கின்றன’ என்றார். பேரரசர் அக்பர் ‘இவ்வளவு நிச்சயமாக நீங்கள் எப்படி அதைச் சொல்ல முடியும்?’ என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு பீர்பால், ‘தயவு செய்து அவற்றை நீங்களே எண்ணிப் பாருங்கள் பேரரசே! ஐம்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தெட்டு காக்கைகளுக்கு மேல் இருந்தால், வெளியூர்களிலிருந்து பல காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பார்க்க வந்திருக்கின்றன” என்று பொருள்.

‘இந்த எண்ணிக்கையை விடக் குறைவாக இருந்தால் இந்த நகரத்து காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பார்க்க வெளியூர் சென்றிருக்கின்றன’ என்றார். பீர்பாலின் சமயோசிதமான பதிலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பேரரசர் அக்பர், ‘பிரமாதம்! பீர்பால், உனக்கு இணை யாருமில்லை’ என்று வியப்புடன் கூறினார்.

Facebook Comments

 

One Response

Leave a Reply