பனூ ஹாஷிம் குலத்தில் (அம்ர் இப்னு அல்கமா என்னும்) ஒருவர் இருந்தார். அவரைக் குறைஷிகளில் மற்றொரு கிளையைச் சேர்ந்த (ம்தாஷ் இப்னு அப்தில்லாஹ் என்னும்) ஒருவர் கூலிக்கு அமர்த்திக் கொண்டார். அந்தக் கூலிக்காரர் தம் முதலாளியுடன் அவரின் ஒட்டகத்தில் (வாணிபக் குழுவினருடன் ஷாம் நோக்கிச்) சென்றார். அப்போது பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த இன்னொருவர் அந்தக் கூலிக்காரரின் அருகே சென்று கொண்டிருந்தார். அந்த பனூ ஹாஷிம் குலத்தவருடைய (ஒட்டகத்தின் இரண்டு பக்கங்களிலும் தொங்க விடப்படும்) பையின் பிடி அறுந்து விட்டிருந்தது. அவர் அந்தக் கூலிக்காரைப் பார்த்து, ‘என்னுடைய ஒட்டகம்தப்பியோடாமல் இருக்க, (அறுந்து போன) என்னுடைய பையின் பிடியை (இணைத்து)க் கட்டுவதற்கு ஒரு கயிறு கொடுத்தார். உடனே அவர், அதன் மூலம் தன்னுடைய பையின் பிடியை (இணைத்து)க் கட்டிக் கொண்டார். அவர்கள் அனைவரும் (ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில்) தங்கியபோது எல்லா ஒட்டகங்களும் (அவற்றுக்குரிய கயிறுகளால்) கட்டிப் போடப்பட்டன. ஒரேயோர் ஒட்டகம் மட்டும் (அதன் கயிற்றை பனூ ஹாஷிம் குலத்தவருக்கு அந்தக் கூலிக்காரர் கொடுத்து விட்டிருந்ததால்) கட்டிப் போடப்படாமல் இருந்தது. அப்போது (கூலிக்காரை நோக்கி) அந்தக் குறைஷி (முதலாளி), ‘இந்த ஒட்டகத்திற்கென்ன? பிற ஒட்டகங்களுக்கிடையே இது மட்டும் ஏன் கட்டிப் போடப்படவில்லை?’ என்று கேட்டதற்கு அந்தக் கூலிக்காரர், ‘அதற்குக் கயிறு இல்லை” என்று கூறினார். முதலாளி, ‘(ஏன்)? அதன் கயிறு எங்கே (போனது)?’ என்று கேட்டார். பிறகு அந்தக் கூலிக்காரரரின் மீது (கோபம் கொண்டு) ஒரு தடியை (எடுத்து) எறிந்தார். அந்த அடியே அந்தக் கூலிக்காரரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. அப்போது (அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடந்த) அந்தக் கூலிக்காரரை யமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்து சென்றார். அவரை நோக்கி (அந்தக் கூலிக்காரர்), ‘ஹஜ் பருவத்தில் நீங்கள் (ஹஜ்ஜில்) கலந்து கொள்வீர்களா?’ என்று கேட்டார். அந்த வழிப்போக்கர், ‘நான் கலந்து கொள்ளமாட்டேன். ஒரு கால் நான் கலந்து கொள்ளவும் செய்யலாம்” என்று கூறினார். அந்தக் கூலீக்காரர், ‘என் சார்பாக ஒரு செய்தியை எப்போதாவது (நான் சொல்லும் குலத்தாரிடம்) தெரிவித்து விடுவாயா?’ என்று கேட்டதற்கு அவர், ‘ஆம் (செய்கிறேன்)” என்று கூறினார். உடனே, அந்தக் கூலிக்காரர், ‘நீ ஹஜ் பருவத்தில் பங்கெடுத்தால் ‘குறைஷிக் குலத்தாரே!’ என்று கூப்பிடு! அவர்கள் பதில் தந்தால் உடனே (குறைஷிக் கிளையான) ‘பனூ ஹாஷிம் குலத்தாரே! என்று கூப்பிடு! அவர்கள் உனக்கு பதிலளித்தால் (பனூ ஹாஷிம் குடும்பத் தலைவரான) ‘அபூ தாலிப்’ பற்றி விசாரி! (அவரைச் சந்தித்து) அவரிடம் ‘இன்னான் ஒரு கயிற்றுக்காக என்னைக் கொன்றுவிட்டான்’ என்று தெரிவித்து விடு” என்று கூறினார். பிறகு அந்தக் கூலிக்காரர் இறந்தும்விட்டார். அவரைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற அந்த குறைஷி முதலாளி (மக்காவிற்குத்) திரும்பி வந்தபோது அவரிடம் அபூ தாலிப் வந்து, ‘(கூலிக்காரரான) எங்கள் ஆள் என்ன ஆனார்?’ என்று கேட்டார். ‘அவர் நோய் வாய்ப்பட்டார். அவரை நல்ல முறையில் நான் கவனித்து வந்தேன். (ஆனாலும் அவர் இறந்துவிட்டார்.) அவரை அடக்கும் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொண்டேன்” என்று கூறினார். ‘உம்மிடமிருந்து (இந்த உதவிகளைப் பெறுவதற்கு) அவர் தகுதியானவரே.” என்று அபூ தாலிப் கூறினார். பின்னர் சிறிது காலம் கழிந்தது. தன்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்படி அந்தக் கூலிக்காரர் இறுதி உபதேசம் செய்து அனுப்பிய (யமன் நாட்டைச் சேர்ந்த) அந்த மனிதர் ஹஜ் பருவத்தில் (ஹஜ்ஜுக்கு) வந்தார். அவர், ‘குறைஷிக் குலத்தினரே!’ என்று அழைத்தார். ‘(சிலரைக் காட்டி) இவர்கள் தாம் குறைஷிகள்” என்று மக்கள் கூறினார்கள். ‘பனூ ஹாஷிம் குலத்தினரே!” என்று அவர் அழைத்தார். ‘இவர்கள் தாம் பனூ ஹாஷிம் குலத்தினர்” என்று மக்கள் தெரிவித்தனர். அவர், ‘அபூ தாலிப் எங்கே?’ என்று கேட்டார். ‘இவர்தான் அபூ தாலிப்” என்று மக்கள் கூறினார்கள். ‘ஒரு கயிற்றுக்காக இன்னான் என்னைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியை உங்களிடம் தெரிவித்து விடும்படி இன்னார் எனக்கு உத்தரவிட்டார்” என்ற அவர் (அபூ தாலிபிடம்) கூறினார். அந்த முதலாளியிடம் அபூ தாலிப் சென்று, ‘எங்களிடமிருந்து மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்” என்று கூறி(விட்டு அறியாமைக் கால வழக்கப்படி பின்வருமாறு சொன்)னார்: . நீ விரும்பினால், எங்கள் ஆளை நீ கொலை செய்ததற்காக (நம்முடைய மரபுப்படி) நூறு ஒட்டகத்தை (நஷ்டயீடாக) செலுத்தலாம். . நீ விரும்பினால் உன்னுடைய சமுதாயத்திலிருந்து ஐம்பது பேர் ‘நீ அவரைக் கொலை செய்யவில்லை’ என்று சத்தியம் செய்யலாம். . (இந்த இரண்டையும் செய்ய) நீ மறுத்தால் உன்னை நாங்கள் அவருக்குப் பதிலாகக் கொன்று விடுவோம்” (என்று கூறினார்.) அந்தக் குறைஷி (முதலாளி) தம் சமுதாயத்தினரிடம் சென்றார். அப்போது அவர்கள், ‘நாங்கள் சத்தியம் செய்கிறோம்” என்று கூறினர். அபூ தாலிபிடம் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தாள். பனூ ஹாஷிம் குலத்(தில் கொலையாளியின் குடும்பத்)தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியாக அவள் இருந்தாள். அவருக்காக ஒரு குழந்தையையும் அவள் பெற்றெடுத்திருந்தாள். அவள் கூறினான்: ‘அபூ தாலிப் அவர்களே! (சத்தியம் செய்ய வேண்டிய) ஐம்பது பேர்களில் இந்த என்னுடைய மகனும் ஒருவனாக இருக்க அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சத்தியம் மேற்கொள்ளப்படும் (கஅபாவிலுளள ருக்ன் மகாமு இப்ராஹீம் இடையிலான) இடத்தில் இவனை சத்தியம் செய்யும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்” (அவனுடைய கோரிக்கைப்படி) அபூ தாலிப் செயல்பட்டார். அப்போது பனூ ஹாஷிம் குலத்தாரில் (கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த) இன்னொரு மனிதரும் வந்து, ‘அபூ தாலிப் அவர்களே! (கொலைக் குற்றத்திற்குப் பரிகாரமாகத் தரப்படும்) நூற ஒட்டகங்களுக்கு பதிலாக ஐம்பது ஆண்கள் சத்தியம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்கள். ஒவ்வோர் ஆணுக்கும் இரண்டு ஒட்டகங்கள் (விகிதம்) ஏற்படும். இதோ, இந்த இரண்டு ஒட்டகங்களை எனக்காக ஏற்றுக் கொள்ளுங்கள். சத்தியம் செய்யுமாறு (அவர்களை) நீங்கள் கட்டாயப்படுத்தும்போது என்னையும் கட்டாயப்படுத்தாதீர்கள்” என்று கூறினார். அந்த இருவரின் கோரிக்கையையும் அபூ தாலிப் ஏற்றார். ஆக, நாற்பத்தியெட்டுப் பேர் வந்து, (“எங்கள் குலத்தைச் சேர்ந்த கிதாஷ் கொலை செய்யப்பட்டவரின் உயிரீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட்டுவிட்டார்” என்று) சத்தியம் செய்தனர்.
அறிவிப்பவர்:3845. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! (அவர்கள் சத்தியம் செய்து) ஓராண்டு கூடக் கழியவில்லை; (பொய்ச் சத்தியம் செய்த) அந்த நாற்பத்தி எட்டுப் பேரின் கண்ணும் (எப்போதும்) துடிக்கும் படி (ஒரு தண்டனையாக) ஆக்கப்பட்டது.
Facebook Comments