யானை படை

, , Leave a comment

நஜ்ஜாஷி மன்னரால் யமன் நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ புனித கஅபாவைப் போன்றதொரு ஆலயத்தைத் தானும் உருவாக்க விரும்பி ‘ஸன்ஆ’ நகரத்தில் பிரம்மாண்டமான கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை நிர்மாணித்தான். மக்காவிற்குச் செல்லும் ஹஜ் பயணிகளைத் தனது சர்ச்சுக்குத் திருப்பிவிட முயற்சித்தான். இதுபற்றி கினானா கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் கேள்விப்பட்டு இரவோடு இரவாக அந்த சர்ச்சுக்குள் புகுந்து அதனை அசுத்தப்படுத்தி விட்டார். அதைக் கண்ட அப்ரஹா கோபத்தால் கொதித்தெழுந்தான். 60,000 வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் பெரிய யானை ஒன்றில் அமர்ந்தவாறு கஅபாவை இடித்துத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினான்.

அப்ரஹா கஅபாவை தகர்க்க வந்தபோது மக்காவில் வசித்த குறைஷியர்கள் அனைவரும் அப்படைகளை எதிர்க்க அஞ்சி மலை உச்சிகளிலும் கணவாய்களிலும் சென்று பதுங்கிக் கொண்டனர்.அவனது படையில் 9 அல்லது 13 யானைகள் இருந்தன. அவன் யமனிலிருந்து கிளம்பி ‘முகம்மஸ்’ என்ற இடத்தில் தனது படையை ஒழுங்குபடுத்தி யானைகளைத் தயார் செய்து மக்காவினுள் நுழைய ஆயத்தமானான். மினா மற்றும் முஜ்தலிஃபாவுக்கிடையே உள்ள ‘முஹஸ்ஸிர்’ என்ற பள்ளத்தாக்கை அடைந்ததும் அவன் வாகனித்த யானை தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டது. அதனைத் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்குத் திசை நோக்கி செலுத்தப்பட்டால் விரைந்து சென்றது. ஆனால், கஅபாவை நோக்கிச் செல்ல மறுத்துவிட்டது.

அந்நிலையில் அல்லாஹ் அவர்கள் மீது சிறிய பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான். அவை சுடப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதன் மூலம் அவர்களை தின்னப்பட்ட வைக்கோல்களைப் போன்று அல்லாஹ் ஆக்கிவிட்டான். இப்பறவைகள் சிறிய குருவிகளைப் போன்று இருந்தன. அவை ஒவ்வொன்றிடமும் பட்டாணியைப் போன்ற மூன்று கற்கள் இருந்தன. ஒன்று அதன் அலகிலும், இரண்டு அதன் இரு கால்களிலும் இருந்தன. அது எவர்மீது விழுந்ததோ அம்மனிதன் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு மரணமடைந்தான். கற்கள் வீசப்படாத சிலரும் இருந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழ தப்பி ஓடினார்கள். வழியிலேயே ஒவ்வொருவராக வீழ்ந்து மரணமடைந்தனர்.அந்தப் படைகள் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கியதைக் கண்ட பின்பே மக்காவில் வசித்த குறைஷியர்கள் நிம்மதியுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.அப்ரஹாவுக்கு அல்லாஹ் ஒரு வியாதியை ஏற்படுத்தினான். அதன் காரணமாக அவனது ஒவ்வொரு விரலும் கழன்று விழ ஆரம்பித்தன. அவன் ஸன்ஆவை அடைந்தபோது ஒரு குருவி குஞ்சை போன்று சுருங்கி விட்டான். பிறகு அவனது மார்புப் பகுதியிலிருந்து இருதயம் வெளியாகி துடிதுடித்துச் செத்தான்.

Facebook Comments

 

Leave a Reply