நட்பு
“நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்
நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்
நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும் வைரமுத்து
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
கல்வி
கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்
கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை
இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்
பாரதிதாசன்
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
அன்பு
பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே;
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே;
அரும்பு விரிய விரியத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே;
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே! மூ.மேத்தா
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து…..
காவல்
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.
தலைப்பாதை….
ரதம் வாங்கினேன்
தங்க ரதம்
எதையும் சுமந்து
தாங்கும் ரதம்
பளபளவென்று ஒளிவீசி
பவனி வந்தது ரதம்
அதில்
உலகையே தூக்கி
உட்கார வைத்து
உலாவத் தொடங்கினேன்
உருண்ட சக்கரங்கள்
ஓடியது மட்டும்
சாலையிலல்ல- என்
தலையில்!
முகம் தெரியாத
அவளுக்காக….
இருண்ட இரவுகளில்
உன் விழியின் ஒளியையே
விளக்காகக் கொண்டு
நான் எழுதும் இந்தக்
கவிதைகளைப் பகலின்
வெளிச்சத்தில் படித்துப்
பார்ப்பவர்களால்
புரிந்து கொள்ளமுடியாது.
பேசக் கூடாதா?
பேசக் கூடாதா?
என்ன தான்
மெளனம்
மொழிகளிலேயே சிறந்த
மொழியென்றாலும்
இன்னொரு மொழியைத்
தெரிந்துவைத்துக் கொள்வதில்
என்ன குற்றம்?
பேசு.
ஒரு மூங்கிற்காட்டையே
அழித்து
ஒரே ஒரு
புல்லாங்குழல் செய்தேன்
ஊதும்போதுதான்
அது
ஊமைமென்று தெரிந்தது
உன்னைப் போலவே.
என் வீதியில்
எல்லா வாகனங்களும்
வருகின்றன.
எனக்கு மட்டும்
இடம் இல்லை
என்கிறார்கள்.
தேசங்களையெல்லாம்
சுற்றி வந்தாலும்
என் கால்கள்
உன் தெருவிற்கே
வந்து சேருகின்றன.
நிலவைப் பார்வையிடும்
நட்சத்திரங்களைப் போல்
அணைந்தணைந்து எரியும் என்
ஆசைகள் உன்னைப்
பார்வையிடுகின்றன.
எத்தனை பாராட்டுக் கிடைத்தாலும்
இதயம் நிறைவுபெற மறுக்கிறது.
ஒரே ஒருமுறை உன்
கண்களால் என்னை
கெளரவிக்க மாட்டாயா?
என் செய்தியை
நான் எழுதத் துடிப்பது
உன் இதயத்தில் தான்
அறிந்தும் அறியாதவள் போல்
நீ ஏன்
ஆட்டோகிராஃப்
நீட்டுகிறாய்?
வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான்
ராகம் பிடிபடுகிறது
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது
உனக்கெங்கே
புரியப் போகிறது?
இந்த ஆரவாரம்
எங்கிருந்து கேட்கிறது?
எங்கிருந்து?
என் மகத்தான கவிதையை
எழுதி முடிக்க விடாமலே
இடையூறாய் இருக்கும் நீ
எங்கிருக்கிறாய்
எங்கிருக்கிறாய்?
வீதியில் நான் கொட்டும்
போர் முரசுதான்
வீட்டுக்கு வந்ததும்
வீணையாகி விடுகிறது
அதுவும்
அழுகையை மட்டுமே
ஆசீர்வதிக்கிறது!
இந்த சோக வீணையைத்
தூக்கிச்
சுமக்க வேண்டியிருக்காது
நீ மட்டும்
என் தோளில் இருந்தால்!
என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களைப் பயிரிட்டேன்
அறுவடை செய்ய
உன்னை அழைத்தேன்
அரிவாளோடு நீ
வந்த பிறகுதான்
என் தவறு
எனக்குப் புரிந்தது!
சிலபேர் காவியங்களைப் படைக்கிறார்கள்
சிலர் காவியங்களிலே வாழ்கிறார்கள்
என்றேன்.
காவியமாகவே வாழ்ந்து விடுகிறேன்
என்றாய்.
எழுதி வைக்கப் படாத
எந்தக் காவியமும்
நிலைக்காது என்பதை
நினைத்துப் பார்த்தாயா?
கனவுகளை நான் வெறுக்கிறேன்
அவை எத்தனை
அழகாக இருந்தாலும்!
நிழல்களின் ஒப்பந்தங்களைவிட
நிஜங்களின் போராட்டமே
எனக்குப் பிடிக்கும்!
உன் பிடிவாதம்
எனக்குப் பிடிக்கிறது
அதனால்தான்
இதயம் கிடந்து
துடிக்கிறது!
நீ
நீயாகத் தான் இருக்கிறாய்
நான் தான்
நானாக இல்லை.
தொட முடியாத
தொலைவில் இருப்பதாகக்
கனவு காணாதே.
இந்த பூமியின்
விளிம்பையே
தீண்டிவிடும் அளவிற்கு
என் விரல்கள்
நீளமானவை.
ஏனென்றால்
என் கைகள்
வெறும் கைகளல்ல..
கவிதைகள்!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
“உன் முன்னே அடர்ந்திருக்கும் இருளை அகற்று!
கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனை போல் எழு
நேற்றும் இன்றும் கதையாக கழிந்துவிட்டன.
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு”
அல்லமா இக்பால்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
“சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போரடும் வரை மனிதன்”
கவிக்கோ அப்துர் ரஹ்மான்
Like this:
Like Loading...
Facebook Comments