சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

Tamil good story

முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர்.

சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒருவர் தன் ஒட்டகம் காணாமற் போனதை முறையிட்டு இவர்களிடம் அதனைப் பற்றி விசாரித்தார். அதற்கு முதலாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு ஒரு கண் குருடா எனக் கேட்டார்? ஆம் என்றார் வழிப்போக்கர். இரண்டாமவர் உங்கள் ஒட்டகத்திற்கு வால் கட்டையா எனக் கேட்டார்?  மீண்டும் ஆம் என்றார் வழிப்போக்கர். மூன்றாம் புதல்வர் உங்கள் ஒட்டகத்தின் ஒரு கால் ஊனமா எனக் கேட்டார்? தனது ஒட்டகம் கிடைத்துவிடும் என்ற ஆனந்தத்தில் அதேதான் எனது ஒட்டகம் என்று கூறிய வழிப்போக்கர் எங்கே எனது ஒட்டகம் எனக் கேட்டார்?. மூவருமே நாங்கள் உங்கள் ஒட்டகத்தை காணவே இல்லை என்றனர். இவர்களை சந்தேகித்து இவர்களது வார்தைகளை  நம்பாத அவர் இவர்களுடன் தானும் காதியிடம் முறையிடச் சென்றார்.

காதி இவர்கள் நால்வரதும் கதையைக் கேட்டார். முதலில் வழிப்போக்கரின் ஒட்டகத்தை எவ்வாறு காணாமல் சரியாக சொன்னீர்கள் என மூன்று புதல்வர்களிடமும் விசாரித்தார். அதற்கு முதலாமவர் “பாதையின் இருபக்கத்திலும் புல்வெளி இருந்தது, ஆனால் ஒட்டகமோ ஒரு பக்கதில் மட்டுமே புற்களை மேய்ந்திருந்தது. எனவே அதற்கு ஒரு கண் குருடாக இருக்கும் என யூகித்தேன்” என்றார். சாமார்த்தியமான அவரது பதிலை ஏற்றுக்கொண்ட காதி இரண்டாமவரிடம் நீர் எவ்வாறு வாலை சரியாக யூகித்தீர் எனக் கேட்டார். அதற்கு அவர் “ஒட்டகம் இளைப்பாறிய இடங்களில் அதன் சாணமோ அருகிலுள்ள புற்களோ களையாமல் இருந்தது. அரபு நாட்டிலுள்ள அதிக சூட்டினாலும் கொசுத் தொல்லையினாலும் ஒட்டகம் தனது வாலால் விசிறும். எனவே வாலிருந்திருப்பின் ஒட்டகம் இளைப்பாறிய இடங்களில் அதன் சாணமோ அருகிலுள்ள புற்களோ களைந்திருக்கும். ஆதலாம் ஒட்டகத்திற்கு வாலில்லை என முடிவெடுத்தேன்” என்றார். புத்திக் கூர்மையான அவரது பதிலையும் ஏற்ற்கொண்டார் காதி. கடைசியாக மூன்றாவது மகன் ” ஒட்டகம் மேய்ந்த இடங்களில் மூன்று கால் தடயங்களே இருந்தது. எனவே அதன் ஒரு கால் ஊனம் என ஊகித்தேன்.” என்றார். மூவரினதும் சாமார்த்திய பதிலை ஏற்றுக் கொண்ட காதி அவ் வழிப்போக்கருக்கு ஒட்டகம் சென்ற பாதை வழியே சென்று ஒட்டகத்தை தேடுமாறு பணித்தார். அடுத்து இம் மூன்று புதல்வர்களின் வழக்கை விசாரித்தார். உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாத அவர் இன்று அங்கு தங்குமாறும் நாளை தீர்ப்புச் சொல்லுவதாவும் அம் மூவருக்கும் பணித்தார். இவர்களைக் கண்கானிக்க ஒரு ஒற்றறையும் நியமித்தார்.

இவர்களுக்கு இரவு உணவாக ஆட்டிறைச்சியும் ரொட்டியும்  வழங்கப்பட்டது. அவ் உணவை சாப்பிட்டதுமே அது ஆட்டிறைச்சி அல்ல, அது நாயின் மாமிசம் என்றார் முதலாமவர். ரொட்டியை சாப்பிட்ட இரண்டாமவர் இது ஒரு கர்ப்பிணிப் பெண் பிசைந்த மாவினால் செய்த ரொட்டியாகும் என்றார்.  மூன்றாமவரோ இக்காதி தவறான வழியில் பிறந்தவர் என்றார்.

இம் மூவரினதும் பதில்களை அடுத்த நாள் காதியிடம் ஒற்றன் கூற மூவரையும் காதி வியப்புடன் விசாரித்தார். ஆட்டிறைச்சி சமைத்தவனை முதலில் விசாரித்தார். அவன் சொன்னான் ” நீங்கள் அவசரமாக மூன்று பேருக்கு ஆட்டிறைச்சி சமைக்குமாறு பணித்தீர்கள், ஆனால் ஆட்டிறைச்சி கிடைக்கவில்லை, எனவே நாயினை அறுத்து சமைத்தேன்” எனஒப்புக் கொண்டான். இரண்டாவதாக ரொட்டி சமைத்தவள் கர்ப்பிணிப் பெண் என்பதையும் உறுதி செய்தார் காதி. வேறு வழியின்றி காதி மூன்றாம் நபரின் கூற்றை உறுதிபடுத்த தன் தாயிடம் சென்று சத்தியமிட்டு விசாரித்தார். தவறான வழியிலேயே காதி பிறந்ததை ஒப்புக் கொண்டாள் அவள். ஆச்சரியமும் குழப்பமும் அடைந்த காதி மூன்று புதல்வர்களிடமும் நீங்கள் எவ்வாறு சரியாக துல்லியாமாக இவற்றை கூறினீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு முதலாமவர் ” ஆட்டிறைச்சியில் முதலில் முல்லும் பின் இறைச்சியும் அடுத்து கொழுப்பும் இருக்கும். ஆனால் நீங்கள் அனுப்பிய மாமிசத்தில் முதலில் முல்லும் பின் கொழுப்பும் அடுத்து இறைச்சியும் இருந்தது. எனவேஅது நாயின் மாமிசம் என ஊகித்தேன்” என்றார்.

அடுத்து இரண்டாமவரிடம்   நீர் எவ்வாறு கணித்தீர் எனவினவினார். அதற்கு அவர் ” ரொட்டியின் ஒரு பகுதி மென்மையாகவும் இன்னொரு பகுதி கடினமாகவும் இருப்பதை அவதானித்தேன். எனவே இந்த ரொட்டி ஒரு கர்ப்பிணி பெண் பிசைந்த மாவினால் செய்த ரொட்டியாகும் என ஊகித்தேன்” என்றார்.

மூன்றாவது புதல்வர் “ஓர் அரபி இன்னொரு அரபி விருந்தினரை கண்காணிக்க ஒற்றரை நியமிக்கமாட்டார். காதியோ எங்களை கண்காணிக்க  ஒருவரை நியமித்திருந்தார். எனவே தான் நான்  காதியின் பிறப்பில் சந்தேகம் கொண்டேன்”. என்றார்.

மூவரினதும் விளக்கங்களையும் புகழ்ந்த காதி அம்மூவரினதும் சொத்துப் பங்குரிமைக்கு பின்வருமாறு தீர்ப்பளித்தார். ” முதலாமவருக்கு சொத்தில் பங்குண்டு. இரண்டாமவருக்கும் வாரிசுரிமை உண்டு. மூன்றாமவருக்கு தந்தையின் உயில்படியே எந்தப் பங்குமில்லை. ஏனெனில் நீர் எவ்வாறு என்னை என் தந்தைக்கு நான் மகனல்ல எனக் கணித்தீரோ அவ்வாறே உம் தந்தைக்கு நீர் மகனில்லை. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி சொந்த பிள்ளைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்குண்டு. ஆதலால் உம்மை வளர்த்த தந்தை உமக்கு பங்கில்லை என உயில் எழுதியுள்ளார்”. இதனை உறுதிபடுத்த தன் தாயிடம் சென்று சத்தியமிட்டு கேட்டார் மூன்றாம் புதல்வர். அதற்கு அத் தாய் நீர்  கைவிடப்பட்ட ஓர் அனாதைக் குழந்தையாக இருந்தீர்.  நாம் உம்மீது பரிதாபப்பட்டு வளர்த்தெடுத்தோம் என்றாள்!!!!!!!!

One thought on “சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *